சிவனடியார்களில் இடையர் குலம் “அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” திருத்தொண்டத் தொகை ஆனாய நாயனார் பெயர்: ஆனாய நாயனார் குலம்: இடையர் சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு [1], விடைக்குலம் [2] என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர். தாம் பசுக்களை மேயவிட்டு, புல்லாங்குழலிலே பெருமானரது அஞ்செழுத்தைப் பொ...