அகநானூறு 174

இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்'' என,
2
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள், முல்லை   5
3
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை 10
4
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
நல் மணல் வியலிடை நடந்த
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?

பொருள்:-

பாசறையில் இருக்கும் தலைவன் தனிமையில் இல்லத்தில் இருக்கும் தன் மனைவியைப் பற்றி எண்ணுகிறான்.
1
இருபெரு வேந்தர்கள் தமக்குள் மாறுபாடு கொண்டு போரிடும் களத்தில், ஒரு படையில் நின்று போராடும் காலத்தில், எதிர்த்து வரும் படையைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் வீரச்செல்வம் உடையவர் மேல்தான் வெற்றிப்புகழ் நிலைக்கும். இந்த உண்மையை அறிந்து மேற்கொண்டிருப்பவன் நான்.
2
மாற்றான் நாட்டைக் கைப்பற்றப் போகிறோம் (பூக்கோள்) என்று தண்ணுமை முழக்கம் கேட்டதும் போருக்குச் செல்வேன் என்பது அவளுக்குத் தெரியாது.
3
இப்போது நான் போர்ப்பாசறையில் இருக்கிறேன். அவள் இருக்குமிடத்தில் முல்லைகொடி தழைக்கும்படி மழை பொழியும். மழை பொழிய மேகம் முழங்கும். அந்த இடி முழக்கத்தைக் கேட்கும்போதெல்லாம், அன்று பறையொலி கேட்டதும் நான் அவளைப் பிரிந்து வந்துவிட்டது நினைவுக்கு வரும். எனவே இடியொலி கேட்கும்போதெல்லாம் நடுங்குவாள். பசலைநோய்த் துன்பத்துடன் இருக்கும் அவள் என்ன ஆவாளோ?
4
மணமுள்ள மலர்கள் மண்ணில் விழுந்து கிடப்பது போன்று மார்பகத்தில் சுணங்குடன் மணல்வெளியில் மெல்ல அசைந்து வருவாளே, அந்த என் மாயோள் என்ன ஆவாளோ?

Comments