அகநானூறு164

கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
விடுவாய்ப் பட்ட வியன் கண் மா நிலம்
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
2
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்   5
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
3
''எவன்கொல் மற்று அவர் நிலை?'' என மயங்கி,
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்    10
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
4
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
கந்து கால் ஒசிக்கும் யானை,
வெஞ் சின வேந்தன் வினை விடப் பெறினே!

பொருள்:-
வேந்தன் போரை முடித்துக்கொண்டால் நல்லது என்று தலைவன் நினைக்கிறான்.
1
சூரியன் தன் வெயில் கைகளால் ஈரத்தை வாங்குகிறான். எங்குமே பச்சை இல்லை. பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. நிலம் வெடித்துக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறிக் காடெல்லாம் அழகு பெறும்படி இப்போது பெருமழை பொழிகிறது.
2
காடெல்லாம் பூக்கள். எங்கும் வண்டுகளின் ஆரவார ஒலி. முல்லை, தோன்றி, பூக்களின் மணம் கமழ்கிறது. அந்த மணம் காதல் வெறியை உண்டாக்குகிறது.
3
இப்படி அவள் நினைப்பாள்.
அவர் நிலைமை என்னவோ தெரியவில்லையே! என்று மயங்குவாள். கண்ணீர் மல்க வருந்துவாள். துன்பப்பட்டுக்கொண்டே வாழ்வாள். அவள் பழைய நலத்தைப் பெறும் நல்ல காலம் இது.
4
பகைவரின் மதில் வாயிலை ஒடித்து தந்தப் பூண் சிதைந்திருக்கும் யானையை, போரை விரும்பிக் கட்டுத்தறியை முரிக்கும் யானையை வேந்தன் போர்த்தொழிலிருந்து விடுவித்தால் நல்லது. இவ்வாறு தலைவன் நினைக்கிறான்.

Comments